கட்டாந்தரையும்… பட்டுமெத்தையும்…
மாலை,வழக்கத்தைவிட, வீடு திரும்ப சற்றே கூடுதலாக நேரமான ஒருநாள். ரயில்
நிலையம் வந்து இறங்கியதும், பெருக்கப்படாத காகித குப்பைகளினூடே, தலைமுதல் பாதம்வரை
அழுக்குத் துணியால் இழுத்துப்போர்த்திய
ஒரு உருவம். ஆணா பெண்ணா தெரியவில்லை. கொஞ்சம் நகர்ந்தபின் எதேச்சையாக திரும்பி
பார்த்தபோது, நெருப்பை மிதித்ததுபோல் நடுங்கிப்போனேன். அது ஒரு பெண். சொல்வதற்கும்
கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. பெண்கள் திங்கள்தோறும் எதிர்கொள்ளும் ப்ரத்யேக நிகழ்வைக்கூட
கையாளும் வழியின்றி...
ஏதோ கற்பாறையின் சுமை வந்து ஒட்டிக்கொண்டது மனதில். வழியில் பலமுறை
தடுமாறினேன். வீடு சென்றதும் பீரோவைத்திறந்து சிலபல புடவைகளயும், பிஸ்கட்
பாக்கெட்டுகளையும் அள்ளிப்போட்டுக்கொண்டேன். “கொஞ்சம் என்கூட வாங்களேன்” என்று கணவனையும் இழுத்துக்கொண்டு, வழியில் பயணிக்கும்போதே
விளக்கத்தைச் சொன்னேன். “இல்லாதவங்களுக்கு உதவறதுல தப்பில்ல” என்று தானாகவே முன்வந்து அனுமதியை
வழங்கிக்கொண்டிருந்தார். ஹோட்டலில் நிறுத்தி கொஞ்சம் உணவும் வாங்கிக்கொண்டோம்.
மீண்டும் ரயில் நிலையம் சென்றபோதும் அவள் கோலம் மாறியிருக்கவில்லை. லேசாக
தட்டி எழுப்பி அந்த உணவையும், உடைகளையும் அளித்துவிட்டோம். என்ன ஏதென்று விளக்கம்
கேட்கவும் கொடுக்கவும் மனமில்லை. நன்றிப்பார்வை தாக்கும் முன்னே நகர்ந்துவிடவே
தோன்றியது. எப்படிச்சொல்வது, எங்களை குற்ற உணர்விலிருந்து காப்பாற்றிக்கொள்ளவே
இதைச் செய்கிறோம் என்று.
அந்த நிமிடத்து இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தாலும், இவ்வாறு கவனிப்பாரற்று
நடைபாதையில் படுத்துறங்கும் மக்களின் நிலைக்கு யார் பொறுப்பேற்ப்பார்கள் எனும்
மற்றுமோர் விடைதெரியா கேள்வி வந்து ஒட்டிக்கொண்டது.
பனிக்குளிரில் பட்டுமெத்தையில் நாம் இறுகப்போர்த்தி உறங்கும் அதே வேளையில்
யாரோ போர்வையும் இருப்பிடமுமற்று நடுங்கிக்கொண்டிருப்பதை எப்போது உணர்வது?
சத்தியமாக மதர் தெரசாவின் பிரதிநிதியாய் காட்டிக்கொள்ளும் உத்தேசமில்லை. நினைத்த
மாத்திரத்தில் உலகப்படம் கண்முன்னே விரியும் அறிவு ஜீவிகள் யாராவது இதற்கான தீர்வை
‘யோசித்தேனும்’ சொல்லமாட்டார்களா என்றுதான்...

1 Comments:
அற்புதம், உங்கள் மனிதநேயம் வியக்கவைக்கிறது. மானுடம் இன்னும் இருக்கிறது என்பதற்கு இது நல்ல சான்று. வாழ்க வளமுடன் சகோதரி !!!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home