Saturday 13 December 2014

இப்பலாம் யார் சார் ஜாதி பாக்குறாங்க...





 

   

    இன்னமும் உறுத்திக்கொண்டேதான் இருக்கிறது, இன்று computer lab ல் அடிப்படை விதிகளைக்கூட பின்பற்றாது அந்த மாணவன் செய்த அத்துமீறல், கண்டிக்கப்படும் ஒவ்வொரு முறையும் குரலுயர்த்தி .நாகரிகமற்றமுறையில் ஆற்றிய எதிர்வினைகளோடு. (சமீப காலமாக பெரும்பாலான ஆசிரியர்கள் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதாகத் தெரிகிறது.)

   துறைத்தலைவர் கவனத்திற்கு எடுத்துச் சென்றபோது, மூன்று வயது குழந்தைக்கு காட்டும் கனிவோடு அவனுக்கு அறிவுரை வழங்கிவிட்டு, நீங்கள் அதிகம் சிரமப்படாதீர்கள் மேடம், இவங்கள்ளாம் இப்படித்தான். நான் இப்பலாம் எதையும் கண்டுகொள்வதில்லை. என்று எனக்கு சமாதானம் சொன்னார். சாரி சார் அவன் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் தந்தால் மட்டுமே என் வகுப்பில் அனுமதிப்பேன் என்றேன். பின்னர் அவன் தந்த கடிதத்தின் எழுத்துக்களில் மட்டுமே வருத்தம் இருந்தது. நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க மேடம். தன் ஜாதியை குறிப்பிட்டு திட்டியதாக அவன் புகார் அளித்தால் உங்களுக்குத்தான் பிரச்சனை என்றார் து.தலைவர்.

   நீயெல்லாம் படிக்கவா வர என்ற சக ஆசிரியர்களின் வார்த்தைகளைக்கூட ஆட்சேபித்திருக்கிறேன். அநாகரிகமான எந்த வார்த்தையும் இதுவரை பிரயோகித்ததில்லை. அப்படியிருக்க, அவன் என்ன ஜாதியென்றுகூட எனக்கு தெரியாது. அப்படியே தெரிந்தாலும் ஜாதியைச்சொல்லி எப்படி திட்ட முடியும்? ஜாதி என்ன கெட்ட வார்த்தையா? எனில் எல்லா ஜாதியும்தானே? இந்த கெட்டவார்த்தையைச் சொல்லத்தடை எனில் மற்ற எல்லா கெட்டவார்த்தைகளுக்கும்தானே?

   ஜாதியின் பெயரால் சக மனிதர்களைக் கீழ்மைப்படுத்துவதைத் தடுக்க உருவாக்கப்பட்ட சட்டத்தை அருவருக்கத்தக்க ஆயுதமாக பயன்படுத்துவதா? இப்படியே, வேலையைச் செய்யச்சொல்லி வலியுறுத்திய உயரதிகாரிகள்மீதும் இதுபோல் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அறிகிறேன். இதன் பக்க, பின் விளைவுகள் என்ன? ஏற்கனவே சிதிலமடைந்த நிர்வாக இயந்திரத்தில் இன்னும் பழுதடைந்த உதிரிபாகங்களைப் பொருத்துவதா?

  தனிமனித வழிபாடு கூடாது என கண்டறிந்து சொன்னவனை ஒரு கூட்டம் வழிபடத்துவங்கினால் எப்படியிருக்கும்?

  தராசுத்தட்டு சமநிலைக்கு வந்தபின்னும் இன்னொரு தட்டில் எடையை கூட்டிக்கொண்டே போனால் என்னாகும்? மறுபடி சமனிலை பிழறாதா?

 எனில் சமனிலையைத் தீர்மானிக்கும் காரணிகள்தான் என்ன? யார் தீர்மானிப்பது? அவரின் நேர்மை மற்றும் நடுநிலையின் நம்பகத்தன்மை என்ன?

அதெப்படி நீ இப்படி பேசலாம் என்று யாரும் வரிந்துகட்டிக்கொண்டு வராதீர்கள். எனக்கு எந்த ஜாதிய பின்னணியும் இல்லை. தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் இல்லை. இவை சலுகைகள் அல்ல பிராயசித்தம் என்று சிலபல புலம்பல்களுக்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன். முழுவரலாறையும் கரைத்துக் குடித்தவள் இல்லையெனினும், மனிதத்தன்மையற்று நடந்த, நடக்கும், பெருங்குற்றங்களையும் பாவச் செயலையும் அறிந்தே இருக்கிறேன். உணர்ந்தும்.

  சகமனித மரியாதை ஜாதி மத பின்னணியால் இருக்கவேண்டாம் என்பதே அடிப்படை.  இருட்டுப்பாதைக்கு ஏற்றித்தந்த கொள்ளிக்கட்டையால் தலை சொறியும் மடத்தனம் வேண்டாம் என்பது அடுத்த வலியுறுத்தல்.



Monday 20 October 2014

என்னை நெய்த நூல்கள்

முன்குறிப்பு: இதை ஏன் எழுதினேன் என்று எனக்கு தெரியவில்லை. இது பிறருக்கு உதவியாகவோ சுவாரஸியமாகவோ இருக்குமா என்றும் தெரியவில்லை. ஆனால் இதை சொல்லியே ஆகணும்னு தோணுமே... அந்த வகை. கொஞ்சமாய் கை வந்தது. 

    * அது ரீகல் சோப் என்றுதான் ஞாபகம். அம்மாவுடன் கைபிடித்து நடந்து செல்லும் சிறுவன் மீது மழைச் சேறு பட்டு கறையாகிவிடும் உடை, சரி செய்து தரும் அம்மா. கார்ட்டூனாக வந்த அந்த விளம்பரம் திரும்ப திரும்ப பலமுறை... இந்த கதை சொல்லு என்று பெரியவர்களை படுத்தி... படிக்கவைத்து பலமுறை பார்த்த முதல் ஆரம்பம். அது பெரியவர்கள் படிக்கும் அமுத சுரபி புத்தகம்.

   * அப்போதுதான் முதல்முறை அந்த செய்தித்தாளோடு இலவச இணைப்பாக ஒரு சிறுவர் புத்தகம் வாரந்தோறும் வர ஆரம்பித்தது. நன்றாக நினைவிலிருக்கிறது முதல் கதை வினாயகர். பொம்மைப்படம். நானும் அண்ணாவும் போட்டி போட்டுக்கொண்டு ஓடுவோம். எப்போதும் அவனுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும். அவன் வேகமா படித்துவிட்டு தருவான் விடும்மா என்பார்கள். பொறுப்பாக தொடர் படிக்க ஆரம்பித்தது அப்போதுதான்.

   * ராணி காமிக்ஸ் என்று பெரும்பாலும் ஜேம்ஸ் பாண்ட் கதை வரும் ஒரு புத்தகம்.  ஜேம்ஸ் பாண்டால் முடியாதது எதுவும் இல்லை என்றும் , சைனா... உலோக கை கொண்ட டாக்டர் நோ போன்ற மிக மிக கொடியவர்கள் நிறைந்த தேசம் என்றும் நம்ப வைத்தது.

   * ஒரு புத்தகத்தை முதன்முதலில் காதலிக்கத்துவங்கினேனென்றால் அது பூந்தளிர். அது விற்கும் கடை அண்ணாவிற்குதான் தெரியும். அவந்தான் வாங்குவான். முட்ட முட்ட படித்துவிட்டு எனக்குத் தருவான். முதலில் அட்டைப் படத்தை வெகுநேரம் பார்த்துக்கொண்டிருப்பேன், லேசாக தடவிப் பார்ப்பேன். பின் எடுத்தவுடனே படித்து தீர்த்துவிட மாட்டேன். குறைந்த பிடித்தம் உள்ளவற்றிலிருந்து அதிகம் பிடித்தவற்றிற்கு அன்வர், காக்கை காளி, கபீஷ் என்று போகும்.  
தூப்தூப், சமந்தகா, பந்திலா என்று அனிமல் கேரக்டர்கள். (இப்போது அந்த புத்தகம் வருவதில்லை. L )

  * கோகுலம் : படக்கதை தவிர அவ்வளவாக எதுவும் ஈர்த்ததில்லை.

  * கனத்த அட்டை வழவழ பக்கங்கள் என்று.. அப்பா ஒரு புத்தகத்தை கையில் கொடுத்தார். ரஷய மொழி மாற்று புத்தகம். கரடிக் குடித்தனம் என்று பெயர். பெரிய படங்கள் கொஞ்சமாய் எழுத்து. நீண்ட பொன் வண்ண தலைமுடியை பின்னி ரிப்பன் கட்டி, முழு frock அணிந்திருக்கும் ஈ ஙொய்மொய் , கொசு ரீங்காரீ, தவளை க்ராக் க்ராக், முயல் கோணல் காலன், நரி பேச்சழகி என்று எல்லாம் ஒரு மண்பானைக்குள் வசிக்க முயற்சி செய்து, கடைசியில் ஒரு கரடி அந்த பானையை போட்டு உடைத்துவிடும்.
அந்த புத்தகத்தைக் காணோம் L

   * ஆர்ச்சி காமிக்ஸ், ஒரு ரோபோ இரண்டு நண்பர்கள் சாகசம் செய்யும் கதைகள். இரும்புக்கை மாயாவியும் அதில் வரும்.  ஒரு தீபாவளி மலர்... அவ்வளவு பெரிய குண்டு புக், பிறந்தவுடன் கைத்துப்பாக்கியைப் பார்த்ததும் அழுகையை நிறுத்திவிட்டு சிரித்து விளையாடும் பிறவி வில்லன் பில்லி, அவனை அடக்கி அழவிடும் cow boy hero.. லக்கி லூக். இதை ஒரு நூறு முறையாவது படித்திருப்பேன். ஒரு கேரமெல் சாக்லேட் தூக்கிப்போட்டு கீழே விழும் முன் துப்பாக்கியை எடுத்து சுட்டுவிட்டு பெருமை பேசும் பில்லி, அது கீழே விழுவதற்குள் மடித்த காகிதத்தை சுட்டு அதில் மனித முகத்தை வரவைக்கும் லூக்.. லக்கி லூக். எத்தனை தமிழ் சினிமா தத்தெடுத்துக் கொண்டிருக்கும் இக்காட்சியை!

இதை யாருக்கோ படிக்கக் கொடுத்து திரும்ப வரவேயில்லை. இன்னமும் அம்மாவிடம் சண்டை போட்டபடி நான்...

சரியாக ஐந்தாவது படிக்கும்போது உனக்கு புக் படிக்க பிடிக்குமா.. என்று பக்கத்துவீட்டு அண்ணா அழைத்துப்போய் லைப்ரரியில் சேர்த்து விட்டார்கள். அவ்வளவு புத்தகமும்.. புத்தக வாசனையும் சேர்ந்து ஒரு பொக்கிஷம் கிடைத்த்துபோல் மூச்சு முட்டியது. அங்கே தெனாலிராமன் மந்திரவாதி கதைகள் என்று ஓடியது. சில புத்தகங்கள் வீட்டுக்கு தர மாட்டார்கள். டேபிள் உயரம் எட்டாமல் மடியில் வைத்து படித்திருக்கிறேன்.

இவை நடுவே பள்ளிப் புத்தகங்கள் படித்ததாகவே நினைவில்லை. ஒன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் பின்னட்டையில் இருந்த முள்ளு பூவும் அதன் மேல் அமர்ந்திருந்த குருவியும் மட்டும் ஞாபகம் இருக்கிறது. அதோ ஓர் அத்திப்பழம்... என்று உள்ளே இருந்த சிவப்பு பழமும். மற்றபடி அவங்க ரெண்டு பேரும்தான் சண்டை போட்டாங்களே இப்போ ஏன் ஒண்ணா பாட்டு பாடுறாங்க ? என்று ஜெமினி சாவித்ரியைப்பற்றி வீட்டில் கேள்வி கேட்கும் அளவிற்கு வில்லேஜ் விஞ்ஞானியாகவே வளர்ந்தேன்.

அவ்வப்போது விடுமுறைக்கு ஊரிலிருந்து வரும் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவர்களை வைத்துக்கொண்டு அண்ணா கதை சொல்லிக் கொண்டிருப்பான். நான் கடைசியாக உட்கார மாட்டேன்.. பின்னால் திரும்பி பார்க்கவும் மாட்டேன். அவ்வளவும் பேய்க்கதைகள் மற்ற்ம் ராஜேஷ் குமார் கதைகள். 

பின்பு ராஜேஷ் குமார், PKP, பாலகுமாரன், சுஜாதா என்று தொடங்கித் தொடர்ந்தேன்.  தி. ஜா. கல்கி, க.நா.சு என்று அவ்வளவு பேரும் அம்மாவால் அறிமுகம். இடையில் அம்மா சொல்லும் எடிசன், க்யூரி, ஐன்ஸ்டைன், பால் வீதி, ஒளிவருஷ  விஷயங்கள்  அறிவியல் கதைகளில் ஒன்றிப்போக வைத்தன. அறிவியல், இவ்வளவையும் தாண்டி கணக்குகளால் ஆனது என்று பின்னாளில் புரிந்தது.

புத்தகங்களைப் போலவே வாரப்பத்திரிகைகளும் பெருமளவில் influence செய்தன. விகடனைவிட குமுதம் பிடிக்கும். முதலில் படிக்க வேண்டுமென்று ஒளித்துவைத்துவிடுவேன். சுஜாதா தயாரித்த குமுதம் இதழில் வாசனை ஸ்ப்ரே செய்யப்பட்ட ரோஜா படம்.. வெகுகாலம் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டது. பிடித்த கதைகளை கட் பண்ணி வைத்துக் கொள்வேன். (இப்போதெல்லாம் குமுதம் விகடன் படிக்கவே தோன்றுவது இல்லை. ) கல்லூரிக் காலத்தில் public library தவிர இன்னொரு lending library க்கும் செல்லும் வழக்கமுண்டு. (பின்னாளில் அந்த லைப்ரரியின் மாடியே என் புகுந்த வீடானது... தனிக்கதை.)

குறிப்பிட்டே ஆகவேண்டிய இன்னொரு புத்தகம்... குழந்தைகளும் குட்டிகளும். ரஷ்ய மலையோர கிராமம், வீடு முழுக்க குதூகலமான சிறுவர்கள், அவ்வப்போது வீட்டிற்கு வரும் புதுப்புது வளர்ப்புப் பிராணிகள் என.. அந்த வீட்டு சிறுமியாகவே என்னை உணர வைக்கும் ஒரு புத்தகம். வழக்கம்போல் அம்மா ஒருவருக்கு கொடுத்து நடுவில் பல பக்கங்களை இழந்து வந்திருக்கிறது. இப்பவும் யாரையும் அவ்வளவாக தொட விட மாட்டேன். இன்னொரு பிரதிக்கு முயன்று கொண்டிருக்கிறேன்.

புத்தகத்தின் சுவாரஸியத்தைப் பொறுத்து.. இரவு ஒரு மணி இரண்டு மணி வரை நீளும் வாசிப்பு..(சில சமயம் சிரித்தபடி சில சமயம் கண்ணீர் வழிய..) மறு நாள்.. கல்லூரிக்கு மிகத் தாமதமாக் போய் நிற்பதில் முடியும். காம்ப்பவுண்ட் ஏறி குதித்தால் கல்லூரி என்றாலும் நேர்வழியில் சுற்றிக்கொண்டு போய்தான் வழக்கம். அட்டெண்டன்ஸ் எடுத்துக்கொண்டிருப்பார்கள்... உன்வீடு ரொம்ப தூரம்னு லேட்டா வரியா என்று அதிக பட்ச திட்டை வாங்கிக்கொண்டு முதல் வரிசை முதல் இடத்தில் சென்று அமர்வேன். அங்கு உட்கார யாருக்கும் துணிவிருக்காது. முதல் வரிசை என்பதால் யாரும் படிப்பாளி என்று எண்ணிவிட வேண்டாமென மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாருடனும் நன்றாக பழகினாலும்.. சட்டென்று ஒரு விலகல் வந்துவிடும். கதை மாந்தருடனோ கதாசிரியருடனோ கற்பனையில் தனியே பேசும் வழக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. பல பெரிய பிரச்சனைகளில் இருந்து வெளியே வர புத்தகங்கள் உதவினாலும், பொதுவாக இருக்கவேண்டிய ஒரு alertness இல்லாமல் போய்விட்டதோ என்று தோன்றுகிறது.

எனினும் தொலைந்து போன சில புத்தகங்களை இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

Friday 5 September 2014

மாசறு பொன்னே...

மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே

மொத்த வகுப்பும் அமைதியாய் உற்று கவனித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வரியையும் ரசனையோடு விவரித்துக் கொண்டிருந்தார் இயற்பியல் ஆசிரியர். ஆம்! இயற்பியல் ஆசிரியர்தான். தமிழிற்கு பலகாலமாக ஆசிரியர் நியமிக்காததால் அவராகவே தமிழையும் எடுக்க ஆரம்பித்திருந்தார். அப்படித்தான் அவர். மாணவிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். (அது ஒரு பெண்கள் பள்ளி). முகத்தில் புன்னகை அணியாமல் பேசி பார்த்ததே இல்லை.

இரயில், பேருந்து பயணங்களிலோ அல்லது நேரிலோ அடர்த்தியாக நடப்பட்ட நாற்றுகளை பார்த்திருப்பீர்கள். காற்று வீசும்போது அவைகளில் ஒரு அதிர்வு பரவிக்கொண்டே போகும். பலருக்கு கவிதைகள் தோன்றக்கூடும் அதைப் பார்த்து...
ஒலி அலை பரவும் முறைதான் எனக்கு எப்போதும் நினைவுக்கு வரும். குளிக்க தாமதம் செய்துகொண்டு வளவிய வென்னீர் ஆறும்போதெல்லாம், ஒரு பொருள் வெப்பமிழக்கும் வீதம் சுற்றுப்புறத்தோடு... என்று மனசுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருப்பேன். கவனித்தால் புரியாமல் இருக்கவே முடியாது என்பதுபோல் பாடமெடுப்பார். எல்லாமே மிக மிகப் பொருத்தமான உதாரணங்கள். எல்லா மாணவிகளுக்குமே அவர்மேல் மிகுந்த மரியாதை உண்டு. என்னைப்பொருத்தவரை எனக்குக் கொஞ்சம் கூடவே... சிலர் பேசும் வார்த்தைகள் மட்டும் ஒரு வரி விடாமல் கிரஹித்துக்கொள்ளத் தோன்றும். அந்தப் பட்டியலில் அவருக்கு முதலிடம்.

ஒரு நாள் நட்பு பற்றி ஏதோ ரொம்ப நேரமாக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். வழக்கம்போல் வகுப்பில் முழு அமைதி. முதல் வரிசையில் இருந்து லேசாக விசும்பல் சத்தம். ஒரு மாணவி கண்ணீர் வழிய வழிய துடைத்துக் கொண்டே அழுது கொண்டிருந்தாள். சார் சார்.. இவ அழறா சார்.. என்று ஒரு துரோகக் குரல். அவர் அதிர்ச்சியாகி என்னாச்சும்மா.. அழறபடி நான் என்ன பேசினேன் என்றார். எல்லாரும் பார்த்துவிட்டதால் அவள் முகத்தை மூடிக்கொண்டு நன்றாக அழ ஆரம்பித்துவிட்டாள். அதற்கு மேல் அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை. மற்ற மாணவிகளே சொன்னார்கள்.. சார் அவளும் சங்கீதாவும் ரொம்ப close friends சார். இப்ப கொஞ்ச நாளா ரெண்டுபேரும் பேசாம் இருக்காங்க. அதான் இவ அழறா என்றார்கள். அப்போது எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டார். அந்த அழுமூஞ்சி மாணவி நான்தான். (காரணம் பிரிதொரு சமயம்...) பின்பு சில நாட்கள் கழித்து அவர்களை சமாதானப் படுத்தி பேச வைத்தார். அப்போதிலிருந்து மரியாதை கூடி என் ரோல் மாடலாகவே ஆகிவிட்டார்.

பள்ளி, கல்லூரிக்குப் பின் இன்று ஒரு உ.பேராசிரியராக நான். சில மாதங்களுக்கு முன் ஒரு திருமணத்தில் சாரை பார்த்துவிட்டு ஓடிப்போய் பக்கத்தில் நின்றேன். அருகில் சென்றதும், மறந்திருப்பாரோ என்ற பயத்துடன்.. சார்.. நான் உங்க student.. என்று இழுத்து ஆரம்பித்தேன்... ஓ! தெரியுமே!! இப்ப கொஞ்ச நாள் முன்னாடி கூட நீயா நானா program ல் வந்தியா? இதெல்லாம் பேசினியா என்று நான் பேசியதை சொல்லி என்னை திகைக்க வைத்தார். ம்ம்.. அப்புறம் உன் friend எப்படி இருக்கா? என்றார். நல்லாருக்கா சார். வெளிநாட்டில் இருக்கிறாள். இருந்தும் என் ஒரே friend அவள் அவளின் ஒரே friend நான். அப்படியேதான் சார் இருக்கோம். இருப்போம். என்றேன். சிரித்தார்.  நன்றியை வார்த்தையில் சொன்னேனா என்று  நினைவில்லை.

மறுநாள் கல்லூரியில் என் மாணவிகளிடம் சொல்லிக்கொண்டிருந்தேன், நான் நேத்து யார பாத்தேன் தெரியுமா? எங்க Physics sir… இவ்ளோ வருஷத்துக்கப்புறம் என்ன ஞாபகம் வச்சிருக்கார்  உடன் ஒரு மாணவி, நானும் பல வருஷம் கழிச்சி யார்கிட்டயாவது சொல்லிகிட்டிருப்பேன்... நான் எங்க Dhana  Mam ஐ பார்த்தேனே... என்று.

இந்த Effect க்கு என்ன பெயர் என்று தெரியவில்லை... Physics Sir ஐத்தான் கேட்க வேண்டும்.


Thursday 3 July 2014

நானுனைத் தேட மாட்டேன்...

உள்ளிருந்து இயக்கும் வெப்பமாய்...
தடம் பதிக்கத் தாங்கும் நிலமாய்...
தாகம் தீர்க்கப் பொழியும் மழையாய்...
அவ்வப்போது தீண்டும் தென்றல் காற்றாய்...
எப்போதும் துணை நிற்கும் பிரபஞ்ச பெருவெளியாய்...
நீங்காமல் தழுவிக்கொண்டேயிருக்கிறாய்...!

பின் எனக்கேனடா உனைத்தேடும் வேலையெல்லாம்...!!!

சுழலில் சிக்கியவள்...

பற்றுடனே பற்றும் கை புறந்தள்ளி, எள்ளி நகைக்கிறாய்...
விட்டு விலகி நிற்கையில் சுழல்நீராய் இழுத்தமிழ்த்துகிறாய்...

எண்ணவோ எழுதவோ இயலாத துன்பத்தால் மேடை செய்து...
துள்ளலாய் ஒரு பண்ணிசைக்கக் கேட்கிறாய்...
வெளிவரும் விசும்பலெல்லாம் இசையென்றே கொள்கிறாய்...

என் பொக்கிஷங்களை எங்கேயோ ஒளித்துவைக்கிறாய்...
கண்ணீரால் திரையிட்டு தேடிக்கொள் என்கிறாய்...

உனைப் புரியவோ பிரியவோ இயலாமல்...
பொங்கு நதிப் புனலில் சிற்றெறும்பாய் உழல்கிறேன்...

இணக்கம் உண்டெனில் மெய் நோக்கம் சொல்லெனக்கு...
இல்லையெனில் இப்போதே விட்டுச்செல்...
வாழ்க்கை என்றொரு பெயரோடு நீ காட்டும் ஜாலத்தை நிறுத்திவிட்டு.

Monday 5 May 2014

லட்டு

The process of deriving one class from another…. உச்ச ஸ்தாயியில் ஒலித்துக் கொண்டிருந்த அவள் குரல் சட்டென்று தயங்கி நின்று, தவிர்க்க முடியாது பார்வை ஜன்னல் வழி சென்றது. அருகில் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள், இலைச் சல்லடைகள் வழியே வழியும் வெளிச்சத்தீற்றல்கள், நடுவே  அழகிய அணில் ஒன்று விரலிடுக்கில் எதையோ வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. தவறவிடக்கூடாத காட்சிதான். பார்த்தவர்களுக்குத்தான் அந்த அழகு புரியும்.  பார்வையை நகர்த்த முடியவில்லை. கற்பிப்பவள் வேடிக்கைபார்ப்பதா?  யாரது சாப்பிட்ட மீதமெல்லாம் ஜன்னல்மேல் வைத்தது? சற்று கோவமாகவே குரலுயர்த்தினாள். அவன்தான் Mam, இவன்தான் Mamசலசலப்புகளிடையே அனைவரின் பார்வையும் ஜன்னல்வழி நிலைத்தது, சற்று நேரம். போதும். இதுதான் வேண்டியிருந்தது.  OK listen, என்று பாடத்தை தொடர்ந்தவள், கரும்பலகை பக்கம் திரும்பி தன் டெக்னிக்கை நினைத்து தானே புன்னகைத்துக் கொண்டாள், அன்று மாலை வாங்கப்போகும் பல்பின் ஒளி தன்பின்னே ஒளிர்வதறியாமல்.

    அடுத்த இருபது நிமிடங்களில் வகுப்பு முடிந்து வெளிவந்தபின், இரண்டு மாணவி குழுக்களுக்கிடையேயான ப்ரச்சனைக்கு நாட்டாமையானதும், தற்கொலைக்கு முயன்ற மாணவியை மருத்துவமனையில் சேர்த்த பரபரப்பில் மதிய உணவு தவறிப்போனதும் இந்த கதைக்கு அவ்வளவு முக்கியமில்லை.

   மாலைவானில் சூழ்ந்திருந்த மேகத்தில் மழையின் சாத்தியம் தெரிந்தது. மழையற்ற நாட்களிலும் போதையையும் தெளிவையும், நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் தந்துகொண்டிருக்கும் வானம் அவளுக்கு முதலும் கடைசியுமான  புகலிடம்.  ஏதாவது கவிதை பொழியுமா என்று வானத்தைப் பார்த்துக்கொண்டே நடந்தாள். நடு ரோட்ல என்னமா பராக்கு? என்ற ஆட்டோகாரரின் கோபக்குரலுக்கு சட்டென்று ஒதுங்கி தலையில் தட்டிக்கொண்டாள். நல்லவேளை யாரும் பார்க்கவில்லை.


    தொடர்ந்து ரயில் நிலைய காத்திருப்புக்கள், பயணங்கள் தாண்டி, டூவீலர் ஸ்டாண்டை அடைந்தபோது அங்கே  விதி அல்லது சதி ஏதோ ஒன்று காத்திருந்தது. பெட்ரோல் தீர்ந்துபோய் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. நான் வாங்கிட்டு வந்து தரேன் மேடம் என்ற பழைய மாணவனிடம் உன்னைவிட்டா இப்ப வேற யாரு இருக்கா என்று மனதில் நினைத்தபடி பரவால்லபா என்றாள். அதிலென்ன மேம் இருக்கு என்று புண்ணியம் கட்டிக்கொண்டான். அவன் நகர்ந்த நிமிடம் மழை பிடித்துக்கொண்டது. தொடர்ந்து இருள் கவிழ்ந்துகொண்டிருந்தது. என்ன கோவமோ வாங்கிவரப்பட்ட பெட்ரோலை ஊற்றியும் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. சரி இதுக்கெல்லாம் அசந்தா எப்படி என்று, மெக்கானிக் ஷாப்பிற்கு போன் செய்தாள். வரும்வரை காக்க வேண்டும்.

   இப்படி உட்காருங்க மேடம் என்று ஒரு சேர் கொடுத்துவிட்டு,  கொஞ்சம் பேச்சும் கொடுக்க ஆரம்பித்தார் ஷெட்காரர்.  என்ன மேடம் இப்படியாகிடுச்சி! பெரிய வண்டின்னா நானே பாத்திருப்பேன் என்று சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார். கொசுக்கள், குளிர்கள், சாரல்கள் என எல்லாத் தொல்லைகளையும் விழுங்கியபடி, பரவால்லீங்க இப்படி நடக்க ஏதாவது காரணம் இருக்கும் சொல்லி வாய்மூடவில்லை, அங்கு வந்த அறிமுகமில்லா நபர் ஒருவர், இங்க வாம்மா என்றார். சற்றே தயக்கத்துடன் என்னங்க? என்று கேட்டுக்கொண்டே அருகில் சென்றாள். திருப்பதி போய்ட்டு இப்பதான்மா நேரா வரேன். ப்ரசாதம் வாங்கிக்கம்மா என்று அவளுக்கும் ஷெட்காரருக்கும் கொடுத்தார்.  இவ்வளவு ப்ரச்சனைக்கும் காரணம் கிடைத்துவிட்ட சந்தோஷம் லட்டுவைவிட இனித்தது. ஆம்! ஃபேவரைட் கடவுள் பாலாஜி! அதற்குள் மெக்கானிக் பாலாஜியும் வந்து சேர்ந்திருந்தான்.

   வீடு திரும்பியதும், என்ன லேட்டாயிடுச்சி என்ற மாமியாரின் கேள்விக்கு பதிலாய், மாலை நடந்த அனைத்தும் விவரிக்கப்பட்டது. லட்டு ப்ரசாதம் பற்றி சொல்லும்போது ஏனோ பெருமிதம் தாங்கவில்லை. அவர்களும் அதிசயிக்கப்போகிறார்கள் என முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அட லூசே! முன்ன பின்ன தெரியாதவங்க தரதெல்லாம் வாங்கி சாப்டுவியா? மயக்க மருந்து கொடுத்து உன் நகையெல்லாம் தூக்கிட்டு போயிருந்தா என்ன பண்ணிருப்ப? கொஞ்சம்கூட பொறுப்பே கிடையாது. ஹ்ம். வாங்கிய பல்பில் முகம் இருண்டது. நடந்திருக்கக்கூடிய வாய்ப்பு வாயை திறக்கவிடவில்லை. அவமானத்தில் என்ன செய்வதென்று புரியவில்லை.

சட்டென்று சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்,


முற்றும்.

Tuesday 1 April 2014

நிலை மாற்றம்

எல்லையற்றப் பெருவெளியில் நீ நிறைந்ததுபோலவே நானும்.
எனக்குள்ளும் நீ உண்டு... நானாய்.
தடுமாறி திக்கற்றுப் போகையிலும்
தொலைதூரப் பரவச வெளிச்சமாய் நீ.

நீ என்பதும் நான்தானே!
கடவுளென்றா அழைக்க உன்னை!

அறிவிலியாய் துயருற்று...
அமிழ்ந்ததாய் உணர்ந்தபோது...
நிரந்தரமல்ல என்றழைத்தாய்..
கரம் பற்றி களித்திருந்தேன்...

இன்னும் கொஞ்சம் உயரமாய் கூட்டிப்போனாய்.
இப்போது புன்னகையற்றுப் போனது. துயரமும்.
விருப்பமும் வெருப்புமில்லை.. உன்மீதும்.
நிரந்தரம், அற்றது பற்றி கவலைகூட.


மாறியிருக்கிறேன் நான்... நீயாய். போதும்.