Friday 5 September 2014

மாசறு பொன்னே...

மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே

மொத்த வகுப்பும் அமைதியாய் உற்று கவனித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வரியையும் ரசனையோடு விவரித்துக் கொண்டிருந்தார் இயற்பியல் ஆசிரியர். ஆம்! இயற்பியல் ஆசிரியர்தான். தமிழிற்கு பலகாலமாக ஆசிரியர் நியமிக்காததால் அவராகவே தமிழையும் எடுக்க ஆரம்பித்திருந்தார். அப்படித்தான் அவர். மாணவிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். (அது ஒரு பெண்கள் பள்ளி). முகத்தில் புன்னகை அணியாமல் பேசி பார்த்ததே இல்லை.

இரயில், பேருந்து பயணங்களிலோ அல்லது நேரிலோ அடர்த்தியாக நடப்பட்ட நாற்றுகளை பார்த்திருப்பீர்கள். காற்று வீசும்போது அவைகளில் ஒரு அதிர்வு பரவிக்கொண்டே போகும். பலருக்கு கவிதைகள் தோன்றக்கூடும் அதைப் பார்த்து...
ஒலி அலை பரவும் முறைதான் எனக்கு எப்போதும் நினைவுக்கு வரும். குளிக்க தாமதம் செய்துகொண்டு வளவிய வென்னீர் ஆறும்போதெல்லாம், ஒரு பொருள் வெப்பமிழக்கும் வீதம் சுற்றுப்புறத்தோடு... என்று மனசுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருப்பேன். கவனித்தால் புரியாமல் இருக்கவே முடியாது என்பதுபோல் பாடமெடுப்பார். எல்லாமே மிக மிகப் பொருத்தமான உதாரணங்கள். எல்லா மாணவிகளுக்குமே அவர்மேல் மிகுந்த மரியாதை உண்டு. என்னைப்பொருத்தவரை எனக்குக் கொஞ்சம் கூடவே... சிலர் பேசும் வார்த்தைகள் மட்டும் ஒரு வரி விடாமல் கிரஹித்துக்கொள்ளத் தோன்றும். அந்தப் பட்டியலில் அவருக்கு முதலிடம்.

ஒரு நாள் நட்பு பற்றி ஏதோ ரொம்ப நேரமாக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். வழக்கம்போல் வகுப்பில் முழு அமைதி. முதல் வரிசையில் இருந்து லேசாக விசும்பல் சத்தம். ஒரு மாணவி கண்ணீர் வழிய வழிய துடைத்துக் கொண்டே அழுது கொண்டிருந்தாள். சார் சார்.. இவ அழறா சார்.. என்று ஒரு துரோகக் குரல். அவர் அதிர்ச்சியாகி என்னாச்சும்மா.. அழறபடி நான் என்ன பேசினேன் என்றார். எல்லாரும் பார்த்துவிட்டதால் அவள் முகத்தை மூடிக்கொண்டு நன்றாக அழ ஆரம்பித்துவிட்டாள். அதற்கு மேல் அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை. மற்ற மாணவிகளே சொன்னார்கள்.. சார் அவளும் சங்கீதாவும் ரொம்ப close friends சார். இப்ப கொஞ்ச நாளா ரெண்டுபேரும் பேசாம் இருக்காங்க. அதான் இவ அழறா என்றார்கள். அப்போது எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டார். அந்த அழுமூஞ்சி மாணவி நான்தான். (காரணம் பிரிதொரு சமயம்...) பின்பு சில நாட்கள் கழித்து அவர்களை சமாதானப் படுத்தி பேச வைத்தார். அப்போதிலிருந்து மரியாதை கூடி என் ரோல் மாடலாகவே ஆகிவிட்டார்.

பள்ளி, கல்லூரிக்குப் பின் இன்று ஒரு உ.பேராசிரியராக நான். சில மாதங்களுக்கு முன் ஒரு திருமணத்தில் சாரை பார்த்துவிட்டு ஓடிப்போய் பக்கத்தில் நின்றேன். அருகில் சென்றதும், மறந்திருப்பாரோ என்ற பயத்துடன்.. சார்.. நான் உங்க student.. என்று இழுத்து ஆரம்பித்தேன்... ஓ! தெரியுமே!! இப்ப கொஞ்ச நாள் முன்னாடி கூட நீயா நானா program ல் வந்தியா? இதெல்லாம் பேசினியா என்று நான் பேசியதை சொல்லி என்னை திகைக்க வைத்தார். ம்ம்.. அப்புறம் உன் friend எப்படி இருக்கா? என்றார். நல்லாருக்கா சார். வெளிநாட்டில் இருக்கிறாள். இருந்தும் என் ஒரே friend அவள் அவளின் ஒரே friend நான். அப்படியேதான் சார் இருக்கோம். இருப்போம். என்றேன். சிரித்தார்.  நன்றியை வார்த்தையில் சொன்னேனா என்று  நினைவில்லை.

மறுநாள் கல்லூரியில் என் மாணவிகளிடம் சொல்லிக்கொண்டிருந்தேன், நான் நேத்து யார பாத்தேன் தெரியுமா? எங்க Physics sir… இவ்ளோ வருஷத்துக்கப்புறம் என்ன ஞாபகம் வச்சிருக்கார்  உடன் ஒரு மாணவி, நானும் பல வருஷம் கழிச்சி யார்கிட்டயாவது சொல்லிகிட்டிருப்பேன்... நான் எங்க Dhana  Mam ஐ பார்த்தேனே... என்று.

இந்த Effect க்கு என்ன பெயர் என்று தெரியவில்லை... Physics Sir ஐத்தான் கேட்க வேண்டும்.