Sunday 19 January 2014

தொலையும் கைப்பைகளும் தொலையாத நம்பிக்கையும்.



பாகம் - I
    அன்று காலை ஒர் 11.00 மணி இருக்கும். சென்ட்ரல் ரயில்நிலையம் எதிரே ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன். அங்கிருந்து நான்காவது நிறுத்தத்தில் இறங்கவேண்டியிருந்தது. 5 நிமிட காத்திருத்தலுக்குப்பின் பஸ் வந்தது. கூட்டம் குறைவாகவே இருந்தது. சன்னலோர இருக்கை எந்த போட்டியுமின்றியே கிடைத்தது. பக்கத்து இருக்கையும் காலியாகவே இருந்தது. ஹேண்ட்பேகை பக்கத்தில் வைத்துவிட்டு, கையில் Carry bag ஐ மட்டும் வைத்துக்கொண்டு, வழக்கம்போல் ஜன்னல்வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். சற்று நேரத்தில் நிறுத்தம் வந்தவுடன் இறங்கி நான்கு அடிகள் நடப்பதற்குள் உணர்ந்தேன் கையில் carry bag மட்டுமே இருக்கிறது. Hand bag ஐ பஸ்சிலேயே விட்டிருக்கிறேன். என்ன செய்வதென்று புரியவில்லை. சட்டென்று அங்கே ஒரு ஆட்டோ வரவும் அந்த பஸ்ஸில் பேகை விட்டுட்டேன். அது பின்னாடியே போங்களேன் என்றேன். இந்த பேகிலும் கொஞ்சம் பணம் இருந்தது.

   சற்றுநேரம் பின்தொடர்ந்தாலும், தொடர்ந்து பஸ்ஸின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியவில்லை. பஸ் நம்பர் என்னம்மா என்றார். 15G என்றால் கோயம்பேடு போகும் இல்லன்னா நேரா பூந்தமல்லி போகும்மா என்றார். எனக்கென்ன தெரியும் பஸ் நம்பர்! நான் இறங்க வேண்டிய இடத்தில் எல்லா பஸ்ஸும் நிற்கும் என்பதால் நான் அதை சரியாக கவனித்திருக்கவில்லை. எனக்கு தெரியலீங்களே என்றேன். அப்போ இனி போறது வேஸ்டுமா என்றார். கொஞ்சம் லேசான வருத்தத்தோடே வீடு திரும்பினேன்.

  இது நடந்து மூன்று நாட்கள் கழித்து, யாரோ என் பெயர் சொல்லி வீட்டுவாசலில் விசாரித்துக்கொண்டிருந்தார்கள். எழுந்து வெளியே சென்று பார்த்தால், அவர் கையில் என் பை. முகம் மொத்தமுமே சிரிப்போடு, என்ன என்று கேட்பதற்குள் அவரே சொன்னார். நான் கோயம்பேடு டிப்போ பஸ் ட்ரைவர்ங்க. உங்க ஊர்காரங்க பேக் விட்டுட்டு போய்ட்டாங்க என்று நண்பர் கொடுத்தார். அதான் கொண்டுவந்தேன். என்றார். கிட்டத்தட்ட ஒரு தெய்வமாகவே தெரிந்தார். நிறைய நன்றிகளையும், விடையையும் கொடுத்து அனுப்பினேன். ID card வைத்து அட்ரஸ் கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்னும் கூடுதல் சந்தோஷம் என்னவென்றால், கொண்டுபோன மதியஉணவு காலி செய்யப்பட்டு, சுத்தமாக கழுவிவைக்கப்பட்டிருந்தது!

பாகம் II

    அந்த நிகழ்ச்சி நடந்து மூன்று மாதங்கள் இருக்கும். இம்முறை குடும்பத்தில் அனைவரும் திருப்பதி சென்றிருந்தோம். வழக்கம்போல் பலமணி நேர காத்திருப்புகளுக்குப்பின் பாலாஜி தரிசனம். எப்போதும் அந்த தருணத்தில் துளிர்விடும் கண்ணீரை மறைக்க லேசாக ப்ரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். பின் வெளிப்ரகாரத்தில் வந்து அனைவரும் அமர்ந்திருந்தோம்.

அந்த நேரத்துக் கூட்டத்தையும் குளிரையும் கொஞ்சநேரம் அனுபவித்துவிட்டு, எழுந்து வெளியே நடக்கத்தொடங்கினேன். எல்லாருமே வந்துவிட்டார்கள். ஏதோ ஒன்று குறைகிறதே என்று யோசித்தேன், மறுபடி கையில் பை இல்லை. அடச்சே! என்ன இப்படி இருக்கிறேனே என்று என்னையே நொந்துகொண்டு, செக்யூரிட்டியிடம் சென்று, என் bag உள்ளே இருக்கு, போகணுங்க என்று கேட்டேன். இல்லமா இந்த வழியா என்ட்ரி கிடையாது என்று மறுத்துவிட்டார். செய்வதறியாமல் முழித்துக்கொண்டு நின்றிருந்தேன். ஐந்து நிமிடம் கடந்திருக்கும். ஒரு பெண் என்னை நெருங்கி வந்தார்கள். இது உங்க Bag –ஆங்க? நீங்க உள்ள விட்டுட்டீங்களா? தனியா கிடந்தது. இங்கதான் இருப்பீங்கன்னு எடுத்துட்டு வந்தோம் என்றார்கள். அதே பேக்! அதே IDcard ! அப்போதைய ரியாக்ஷனையெல்லாம் விவரிக்கமுடியாது. ரொம்ப ரொம்ப சந்தோஷமான தருணம் அது.

பாகம் III

    இப்போது சொல்வது மிகச் சமீபத்து நிகழ்வு. மாலை பணியிலிருந்து வீடு திரும்பும்போது, கையில் இரண்டு மூன்று பொருட்கள். ரயில் நிலையத்து சிமென்ட் பென்ச்சில் நண்பர்களுடன் அமர்ந்திருந்தேன். ரயில் வந்தது, இரண்டு நிறுத்தம் தாண்டி இறங்கவேண்டிய இடமும் வந்தது. எல்லாம் பொருட்களும் இருக்கா என்று பார்த்தால், ஒரு பேகை காணோம். OMG! கொஞ்சம்கூட யோசிக்காமல், நான் ஏறிய ரயில் நிலையத்தில் இருக்கக்கூடிய சாத்தியம் உள்ள ஒரு நண்பருக்கு போன் செய்தேன். எதிர்பார்த்தபடியே இருந்தார். ஆனால் எதிர்த்திசை! எதிர் platform! அதைவிட கொடுமை அவர் ட்ரெயினும் வந்து அப்போதுதான் ஏறி அமர்ந்திருக்கிறார். என் பேக் அங்கேயே இருப்பதாகச் சொன்னார். ஆனால் நிச்சயம் போய் எடுக்கவும் முடியாது. அந்த ட்ரெயினும் நகர ஆரம்பிக்கிறது. அதற்குள் அவர் சத்தமாக யார் பேரையோ சொல்லி அழைத்து, சார், அந்த பேக் மேடமோடது எடுத்துக்கோங்க. என்றார். அவர் சொன்ன நபர் என் ஊர்க்காரர்.

  பிறகென்ன மறுபடி பேக் வீடு வந்து சேர்ந்தது. இந்த நிகழ்வில் ஒவ்வொரு நொடியும் முக்கியத்துவம் வாய்ந்தது. அழகாக செதுக்கப்பட்டது. எது மாறியிருந்தாலும் பை கைக்கு வந்திருக்காது. பேக் கிடைத்ததைவிட இந்த நிகழ்வில் பொங்கிவழியும் ஆச்சர்யம் அதிக மகிழ்ச்சி. இதை யாரேனும் சொல்லியிருந்தால் நானேகூட நம்பியிருப்பேனா தெரியவில்லை.


இப்படி பொருப்பில்லாமல் இருக்கியே என்று சிலர் திட்டக்கூடும். ஆனால் என்னுடையவை எதுவும் என்னைவிட்டு தொலைந்துபோகாது என்ற நம்பிக்கையை என்னுள் ஆழமாக விதைத்த நிகழ்வுகள் இவை. அதைப்போலவே, மனதில் உருவாகும் சில எண்ணங்களும் விருப்பங்களும், அடுத்த சில நிமிடங்களிலேயே எந்த முயற்சியுமின்றியே சாத்தியமாகும் அதிசயங்களும் என் வாழ்வில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இவ்வளவையும்மீறி, ஏதாவதொன்றை நான் தொலைத்திருந்தால் அது என்னுடையதில்லை!

ஆட்டோவில் விட்டுவிட்டு வரும் குடைகளை ஆட்டோகாரர் பயன்படுத்த மாட்டாரா என்ன!