Thursday 3 July 2014

நானுனைத் தேட மாட்டேன்...

உள்ளிருந்து இயக்கும் வெப்பமாய்...
தடம் பதிக்கத் தாங்கும் நிலமாய்...
தாகம் தீர்க்கப் பொழியும் மழையாய்...
அவ்வப்போது தீண்டும் தென்றல் காற்றாய்...
எப்போதும் துணை நிற்கும் பிரபஞ்ச பெருவெளியாய்...
நீங்காமல் தழுவிக்கொண்டேயிருக்கிறாய்...!

பின் எனக்கேனடா உனைத்தேடும் வேலையெல்லாம்...!!!

சுழலில் சிக்கியவள்...

பற்றுடனே பற்றும் கை புறந்தள்ளி, எள்ளி நகைக்கிறாய்...
விட்டு விலகி நிற்கையில் சுழல்நீராய் இழுத்தமிழ்த்துகிறாய்...

எண்ணவோ எழுதவோ இயலாத துன்பத்தால் மேடை செய்து...
துள்ளலாய் ஒரு பண்ணிசைக்கக் கேட்கிறாய்...
வெளிவரும் விசும்பலெல்லாம் இசையென்றே கொள்கிறாய்...

என் பொக்கிஷங்களை எங்கேயோ ஒளித்துவைக்கிறாய்...
கண்ணீரால் திரையிட்டு தேடிக்கொள் என்கிறாய்...

உனைப் புரியவோ பிரியவோ இயலாமல்...
பொங்கு நதிப் புனலில் சிற்றெறும்பாய் உழல்கிறேன்...

இணக்கம் உண்டெனில் மெய் நோக்கம் சொல்லெனக்கு...
இல்லையெனில் இப்போதே விட்டுச்செல்...
வாழ்க்கை என்றொரு பெயரோடு நீ காட்டும் ஜாலத்தை நிறுத்திவிட்டு.