Monday 20 October 2014

என்னை நெய்த நூல்கள்

முன்குறிப்பு: இதை ஏன் எழுதினேன் என்று எனக்கு தெரியவில்லை. இது பிறருக்கு உதவியாகவோ சுவாரஸியமாகவோ இருக்குமா என்றும் தெரியவில்லை. ஆனால் இதை சொல்லியே ஆகணும்னு தோணுமே... அந்த வகை. கொஞ்சமாய் கை வந்தது. 

    * அது ரீகல் சோப் என்றுதான் ஞாபகம். அம்மாவுடன் கைபிடித்து நடந்து செல்லும் சிறுவன் மீது மழைச் சேறு பட்டு கறையாகிவிடும் உடை, சரி செய்து தரும் அம்மா. கார்ட்டூனாக வந்த அந்த விளம்பரம் திரும்ப திரும்ப பலமுறை... இந்த கதை சொல்லு என்று பெரியவர்களை படுத்தி... படிக்கவைத்து பலமுறை பார்த்த முதல் ஆரம்பம். அது பெரியவர்கள் படிக்கும் அமுத சுரபி புத்தகம்.

   * அப்போதுதான் முதல்முறை அந்த செய்தித்தாளோடு இலவச இணைப்பாக ஒரு சிறுவர் புத்தகம் வாரந்தோறும் வர ஆரம்பித்தது. நன்றாக நினைவிலிருக்கிறது முதல் கதை வினாயகர். பொம்மைப்படம். நானும் அண்ணாவும் போட்டி போட்டுக்கொண்டு ஓடுவோம். எப்போதும் அவனுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும். அவன் வேகமா படித்துவிட்டு தருவான் விடும்மா என்பார்கள். பொறுப்பாக தொடர் படிக்க ஆரம்பித்தது அப்போதுதான்.

   * ராணி காமிக்ஸ் என்று பெரும்பாலும் ஜேம்ஸ் பாண்ட் கதை வரும் ஒரு புத்தகம்.  ஜேம்ஸ் பாண்டால் முடியாதது எதுவும் இல்லை என்றும் , சைனா... உலோக கை கொண்ட டாக்டர் நோ போன்ற மிக மிக கொடியவர்கள் நிறைந்த தேசம் என்றும் நம்ப வைத்தது.

   * ஒரு புத்தகத்தை முதன்முதலில் காதலிக்கத்துவங்கினேனென்றால் அது பூந்தளிர். அது விற்கும் கடை அண்ணாவிற்குதான் தெரியும். அவந்தான் வாங்குவான். முட்ட முட்ட படித்துவிட்டு எனக்குத் தருவான். முதலில் அட்டைப் படத்தை வெகுநேரம் பார்த்துக்கொண்டிருப்பேன், லேசாக தடவிப் பார்ப்பேன். பின் எடுத்தவுடனே படித்து தீர்த்துவிட மாட்டேன். குறைந்த பிடித்தம் உள்ளவற்றிலிருந்து அதிகம் பிடித்தவற்றிற்கு அன்வர், காக்கை காளி, கபீஷ் என்று போகும்.  
தூப்தூப், சமந்தகா, பந்திலா என்று அனிமல் கேரக்டர்கள். (இப்போது அந்த புத்தகம் வருவதில்லை. L )

  * கோகுலம் : படக்கதை தவிர அவ்வளவாக எதுவும் ஈர்த்ததில்லை.

  * கனத்த அட்டை வழவழ பக்கங்கள் என்று.. அப்பா ஒரு புத்தகத்தை கையில் கொடுத்தார். ரஷய மொழி மாற்று புத்தகம். கரடிக் குடித்தனம் என்று பெயர். பெரிய படங்கள் கொஞ்சமாய் எழுத்து. நீண்ட பொன் வண்ண தலைமுடியை பின்னி ரிப்பன் கட்டி, முழு frock அணிந்திருக்கும் ஈ ஙொய்மொய் , கொசு ரீங்காரீ, தவளை க்ராக் க்ராக், முயல் கோணல் காலன், நரி பேச்சழகி என்று எல்லாம் ஒரு மண்பானைக்குள் வசிக்க முயற்சி செய்து, கடைசியில் ஒரு கரடி அந்த பானையை போட்டு உடைத்துவிடும்.
அந்த புத்தகத்தைக் காணோம் L

   * ஆர்ச்சி காமிக்ஸ், ஒரு ரோபோ இரண்டு நண்பர்கள் சாகசம் செய்யும் கதைகள். இரும்புக்கை மாயாவியும் அதில் வரும்.  ஒரு தீபாவளி மலர்... அவ்வளவு பெரிய குண்டு புக், பிறந்தவுடன் கைத்துப்பாக்கியைப் பார்த்ததும் அழுகையை நிறுத்திவிட்டு சிரித்து விளையாடும் பிறவி வில்லன் பில்லி, அவனை அடக்கி அழவிடும் cow boy hero.. லக்கி லூக். இதை ஒரு நூறு முறையாவது படித்திருப்பேன். ஒரு கேரமெல் சாக்லேட் தூக்கிப்போட்டு கீழே விழும் முன் துப்பாக்கியை எடுத்து சுட்டுவிட்டு பெருமை பேசும் பில்லி, அது கீழே விழுவதற்குள் மடித்த காகிதத்தை சுட்டு அதில் மனித முகத்தை வரவைக்கும் லூக்.. லக்கி லூக். எத்தனை தமிழ் சினிமா தத்தெடுத்துக் கொண்டிருக்கும் இக்காட்சியை!

இதை யாருக்கோ படிக்கக் கொடுத்து திரும்ப வரவேயில்லை. இன்னமும் அம்மாவிடம் சண்டை போட்டபடி நான்...

சரியாக ஐந்தாவது படிக்கும்போது உனக்கு புக் படிக்க பிடிக்குமா.. என்று பக்கத்துவீட்டு அண்ணா அழைத்துப்போய் லைப்ரரியில் சேர்த்து விட்டார்கள். அவ்வளவு புத்தகமும்.. புத்தக வாசனையும் சேர்ந்து ஒரு பொக்கிஷம் கிடைத்த்துபோல் மூச்சு முட்டியது. அங்கே தெனாலிராமன் மந்திரவாதி கதைகள் என்று ஓடியது. சில புத்தகங்கள் வீட்டுக்கு தர மாட்டார்கள். டேபிள் உயரம் எட்டாமல் மடியில் வைத்து படித்திருக்கிறேன்.

இவை நடுவே பள்ளிப் புத்தகங்கள் படித்ததாகவே நினைவில்லை. ஒன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் பின்னட்டையில் இருந்த முள்ளு பூவும் அதன் மேல் அமர்ந்திருந்த குருவியும் மட்டும் ஞாபகம் இருக்கிறது. அதோ ஓர் அத்திப்பழம்... என்று உள்ளே இருந்த சிவப்பு பழமும். மற்றபடி அவங்க ரெண்டு பேரும்தான் சண்டை போட்டாங்களே இப்போ ஏன் ஒண்ணா பாட்டு பாடுறாங்க ? என்று ஜெமினி சாவித்ரியைப்பற்றி வீட்டில் கேள்வி கேட்கும் அளவிற்கு வில்லேஜ் விஞ்ஞானியாகவே வளர்ந்தேன்.

அவ்வப்போது விடுமுறைக்கு ஊரிலிருந்து வரும் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவர்களை வைத்துக்கொண்டு அண்ணா கதை சொல்லிக் கொண்டிருப்பான். நான் கடைசியாக உட்கார மாட்டேன்.. பின்னால் திரும்பி பார்க்கவும் மாட்டேன். அவ்வளவும் பேய்க்கதைகள் மற்ற்ம் ராஜேஷ் குமார் கதைகள். 

பின்பு ராஜேஷ் குமார், PKP, பாலகுமாரன், சுஜாதா என்று தொடங்கித் தொடர்ந்தேன்.  தி. ஜா. கல்கி, க.நா.சு என்று அவ்வளவு பேரும் அம்மாவால் அறிமுகம். இடையில் அம்மா சொல்லும் எடிசன், க்யூரி, ஐன்ஸ்டைன், பால் வீதி, ஒளிவருஷ  விஷயங்கள்  அறிவியல் கதைகளில் ஒன்றிப்போக வைத்தன. அறிவியல், இவ்வளவையும் தாண்டி கணக்குகளால் ஆனது என்று பின்னாளில் புரிந்தது.

புத்தகங்களைப் போலவே வாரப்பத்திரிகைகளும் பெருமளவில் influence செய்தன. விகடனைவிட குமுதம் பிடிக்கும். முதலில் படிக்க வேண்டுமென்று ஒளித்துவைத்துவிடுவேன். சுஜாதா தயாரித்த குமுதம் இதழில் வாசனை ஸ்ப்ரே செய்யப்பட்ட ரோஜா படம்.. வெகுகாலம் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டது. பிடித்த கதைகளை கட் பண்ணி வைத்துக் கொள்வேன். (இப்போதெல்லாம் குமுதம் விகடன் படிக்கவே தோன்றுவது இல்லை. ) கல்லூரிக் காலத்தில் public library தவிர இன்னொரு lending library க்கும் செல்லும் வழக்கமுண்டு. (பின்னாளில் அந்த லைப்ரரியின் மாடியே என் புகுந்த வீடானது... தனிக்கதை.)

குறிப்பிட்டே ஆகவேண்டிய இன்னொரு புத்தகம்... குழந்தைகளும் குட்டிகளும். ரஷ்ய மலையோர கிராமம், வீடு முழுக்க குதூகலமான சிறுவர்கள், அவ்வப்போது வீட்டிற்கு வரும் புதுப்புது வளர்ப்புப் பிராணிகள் என.. அந்த வீட்டு சிறுமியாகவே என்னை உணர வைக்கும் ஒரு புத்தகம். வழக்கம்போல் அம்மா ஒருவருக்கு கொடுத்து நடுவில் பல பக்கங்களை இழந்து வந்திருக்கிறது. இப்பவும் யாரையும் அவ்வளவாக தொட விட மாட்டேன். இன்னொரு பிரதிக்கு முயன்று கொண்டிருக்கிறேன்.

புத்தகத்தின் சுவாரஸியத்தைப் பொறுத்து.. இரவு ஒரு மணி இரண்டு மணி வரை நீளும் வாசிப்பு..(சில சமயம் சிரித்தபடி சில சமயம் கண்ணீர் வழிய..) மறு நாள்.. கல்லூரிக்கு மிகத் தாமதமாக் போய் நிற்பதில் முடியும். காம்ப்பவுண்ட் ஏறி குதித்தால் கல்லூரி என்றாலும் நேர்வழியில் சுற்றிக்கொண்டு போய்தான் வழக்கம். அட்டெண்டன்ஸ் எடுத்துக்கொண்டிருப்பார்கள்... உன்வீடு ரொம்ப தூரம்னு லேட்டா வரியா என்று அதிக பட்ச திட்டை வாங்கிக்கொண்டு முதல் வரிசை முதல் இடத்தில் சென்று அமர்வேன். அங்கு உட்கார யாருக்கும் துணிவிருக்காது. முதல் வரிசை என்பதால் யாரும் படிப்பாளி என்று எண்ணிவிட வேண்டாமென மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாருடனும் நன்றாக பழகினாலும்.. சட்டென்று ஒரு விலகல் வந்துவிடும். கதை மாந்தருடனோ கதாசிரியருடனோ கற்பனையில் தனியே பேசும் வழக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. பல பெரிய பிரச்சனைகளில் இருந்து வெளியே வர புத்தகங்கள் உதவினாலும், பொதுவாக இருக்கவேண்டிய ஒரு alertness இல்லாமல் போய்விட்டதோ என்று தோன்றுகிறது.

எனினும் தொலைந்து போன சில புத்தகங்களை இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.