Wednesday 27 November 2013

கட்டாந்தரையும்… பட்டுமெத்தையும்…


மாலை,வழக்கத்தைவிட, வீடு திரும்ப சற்றே கூடுதலாக நேரமான ஒருநாள். ரயில் நிலையம் வந்து இறங்கியதும், பெருக்கப்படாத காகித குப்பைகளினூடே, தலைமுதல் பாதம்வரை  அழுக்குத் துணியால் இழுத்துப்போர்த்திய ஒரு உருவம். ஆணா பெண்ணா தெரியவில்லை. கொஞ்சம் நகர்ந்தபின் எதேச்சையாக திரும்பி பார்த்தபோது, நெருப்பை மிதித்ததுபோல் நடுங்கிப்போனேன். அது ஒரு பெண். சொல்வதற்கும் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. பெண்கள் திங்கள்தோறும் எதிர்கொள்ளும் ப்ரத்யேக நிகழ்வைக்கூட கையாளும் வழியின்றி...

ஏதோ கற்பாறையின் சுமை வந்து ஒட்டிக்கொண்டது மனதில். வழியில் பலமுறை தடுமாறினேன். வீடு சென்றதும் பீரோவைத்திறந்து சிலபல புடவைகளயும், பிஸ்கட் பாக்கெட்டுகளையும் அள்ளிப்போட்டுக்கொண்டேன். கொஞ்சம் என்கூட வாங்களேன் என்று கணவனையும் இழுத்துக்கொண்டு, வழியில் பயணிக்கும்போதே விளக்கத்தைச் சொன்னேன். இல்லாதவங்களுக்கு உதவறதுல தப்பில்ல என்று தானாகவே முன்வந்து அனுமதியை வழங்கிக்கொண்டிருந்தார். ஹோட்டலில் நிறுத்தி கொஞ்சம் உணவும் வாங்கிக்கொண்டோம்.

மீண்டும் ரயில் நிலையம் சென்றபோதும் அவள் கோலம் மாறியிருக்கவில்லை. லேசாக தட்டி எழுப்பி அந்த உணவையும், உடைகளையும் அளித்துவிட்டோம். என்ன ஏதென்று விளக்கம் கேட்கவும் கொடுக்கவும் மனமில்லை. நன்றிப்பார்வை தாக்கும் முன்னே நகர்ந்துவிடவே தோன்றியது. எப்படிச்சொல்வது, எங்களை குற்ற உணர்விலிருந்து காப்பாற்றிக்கொள்ளவே இதைச் செய்கிறோம் என்று.

அந்த நிமிடத்து இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தாலும், இவ்வாறு கவனிப்பாரற்று நடைபாதையில் படுத்துறங்கும் மக்களின் நிலைக்கு யார் பொறுப்பேற்ப்பார்கள் எனும் மற்றுமோர் விடைதெரியா கேள்வி வந்து ஒட்டிக்கொண்டது.

பனிக்குளிரில் பட்டுமெத்தையில் நாம் இறுகப்போர்த்தி உறங்கும் அதே வேளையில் யாரோ போர்வையும் இருப்பிடமுமற்று நடுங்கிக்கொண்டிருப்பதை எப்போது உணர்வது? சத்தியமாக மதர் தெரசாவின் பிரதிநிதியாய் காட்டிக்கொள்ளும் உத்தேசமில்லை. நினைத்த மாத்திரத்தில் உலகப்படம் கண்முன்னே விரியும் அறிவு ஜீவிகள் யாராவது இதற்கான தீர்வை யோசித்தேனும் சொல்லமாட்டார்களா என்றுதான்...

Thursday 14 November 2013

என் தந்தை தோழன்



என் தந்தை தோழன்....


   அன்று நான் பிறந்த அடுத்த சில நொடிகளிலேயே ஆரம்பித்திருக்கக் கூடும் எனக்கும் அவருக்குமான உறவு. என் ஆளுமையின் பிறப்பிடம் அதுதான் என்று கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். சிறு வயதில் தலை வாரி அழகு பார்த்ததில் தொடங்கி அப்பா மேல் காலைப் போட்டுக் கொண்டே தூங்கிய பொழுதுகள் மின்னி மறைகின்றன.

    எல்லா தந்தையும் இப்படித்தானா தெரியாது, மிகப் பெரிய ஹீரோ எனக்கு. வானில் புள்ளியாய் தெரியும் ஏரோப்ளேனில் அப்பா போவதாய் நண்பர்களிடம் கதை சொல்லிக் கொண்டிருப்பேன். வீட்டில் எப்போதும் ப்ழைய ஹிந்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். லைலா.. ஓ லைலா பாட்டுக்கு சேர்ந்து நடனமாடுவோம். எது கேட்டாலும் மறுக்காதவர். ஏழாம் வகுப்பிலேயே மொபட் ஓட்ட அனுமதித்தவர். அதீத செல்லம். உலகத்துக்கே மகாராணி என்ற எண்ணம் தோன்றும்படியே வளர்ப்பு. கல்லூரித் தேர்வுக்கு முந்தைய நாள், மின்வெட்டு, வயல்வெளிகளுக்கிடையே கொண்டு போய் நிறுத்திய சுமோ விளக்கொளியில் நள்ளிரவு வரை படிக்க வைத்து அழகு பார்த்தவர்.(அப்போதும் பெரிதாய் படித்து உருப்படவில்லை என்பது வேறு விஷயம். )  ஹாரன்மேல் ஒரு விரல் வைப்பது போலவே ப்ரேக்கிலும் ஒரு கை இருக்க வேண்டும் என சொல்லிக்கொடுத்த பழக்கம், அக்கா ப்ரேக் பிடிச்சுகிட்டே accelerate பண்றாங்க என்று தம்பி கேலி செய்வதில் வந்து நிற்கிறது.

   கையில் எப்போதும் வெண்குழலுடனே காணப்படுவார். வளையமாய் புகைவிட்டு வித்தை காட்டுவார். ஐந்து நிமிட தூரத்திற்கும் வந்து வண்டியில் பிக் அப் செய்வார். உன் ஜேம்ஸ் பாண்ட் வந்து விட்டார் போ என்று நண்பர்கள் அனுப்பி வைப்பார்கள். (என்ன ஒரே சுய புராணமாக இருக்கிறதே என நினைக்காதீர்கள். சொல்வதற்கு சில முக்கியமான விஷயங்களும் என்னிடம் உண்டு. அது கடைசியில்.) நன்றாக சமைப்பார். ஏலக்காய் டீ போட்டுத் தந்தால் இது பாயசமா என்றும் மிள்கு டீ போடுகையில் இது ரசமா என்றும் கேட்டு வெறுப்பேற்றி இருக்கிறேன். 

   எனக்கு திருமணமான பின்பான பிரிவை இருவருமே நன்றாக மறைத்துக் கொண்டோம். என் கணவருடன் என்னைவிட தோழமையாக இருப்பார். அடிக்கடி இருவரும் சேர்ந்து ஊர் சுற்றுவது எனக்கே பொறாமையாக இருக்கும்.

   ஒரு நாள் அனைவரும் எங்கோ சுற்றுலா சென்று திரும்பிய இரவு, களைப்பில் படுத்து அப்படியே உறங்கி விட்டேன். கொஞ்ச நேரம் கழித்து என்னை தட்டி எழுப்பி அரைத்தூக்கத்திலேயே போதும் போதுமென பசியாறும்வரை தோசைகளை ஊட்டி விட்டார்.(அவரே செய்தது.) மேலும் அப்போது எனக்கே இரண்டு குழந்தைகள்.

   இன்னும் சில மாதங்கள் கழித்து அம்மு South India கோவில்களுக்கெல்லாம் போகலாம் கிளம்பி வா என்றார். போங்க பா நான் ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி மறுத்து விட்டேன். என்னைவிட்டு அவர்கள் மட்டும் கிளம்பினர். தெருமுனை திரும்பும் வரை பின்னாடியே சென்று கையசைத்துக் கொண்டிருந்தேன். அந்த .நிமிடத்து புன்னகை இன்று வரை மறக்க முடியாதது. ஆனால் அது கடைசி என்று அப்போது தெரியாது. அடுத்த இரண்டு நாட்களில், அவர் வாங்கி வந்த இனிப்பு காய்கறி பழங்கள் அனைத்தும் வேடிக்கை பார்க்க சில நொடிகளில் மாரடைப்பால் உயிர் துறந்தார். அதுவரை எந்த மரணத்தையும் நேர்கொண்டதில்லை. பாதியில் என்னைவிட்டுப் போனது மிகப்பெரிய துரோகமாய்த் தோன்றியது. எவ்வளவு சண்டை போட்டும் அழுது புலம்பியும் திரும்பி வரவேயில்லை. அன்றிரவு வீட்டு மொட்டை மாடியில் இருந்து நீ என்னை சுத்தி எங்கேயோ தானே இருக்க? எனக்கு தெரியும் கண்டிப்பா நீ பதில் சொல்லியே ஆகணும். எந்தவிதத்திலாவது. என்று புலம்பிக் கொண்டிருந்தபோது ஒரு எரிகல் ஒளிர்ந்து விழுந்த நிகழ்வு எதேச்சையானதில்லை எனக்கு.

மிக அன்பான கணவன், குழந்தைகள் என எல்லா நலமும் என்னைச் சூழ்ந்திருந்தாலும் ஏதோ ஒன்றை தொலைத்த குழந்தையாய் இன்னமும் நான் தேடிக் கொண்டிருப்பது என் தந்தை தோழனைத்தான். யாரிடம் அவர் சாயல் தெரிந்தாலும் நான் அவருக்கு அடிமையாகிறேன்.

   இனி... எல்லா மகள்களின் அன்பு அப்பாக்களிடமும் நான் கேட்டுக் கொள்வது... இது போன்ற சார்புத் தன்மையை உங்கள் மகள்களிடம் உருவாக்கி விடாதீர்கள். அதை தொடர்ந்து பெற முடியாத நிலை வரும் போது உங்கள் மகள்கள் செய்வதறியாது தவித்துப் போவார்கள். அது யாராலும் நிறைவு செய்ய முடியாத நிலையாகிவிடும்.

  மேலும்... அதீதமாய் புகை பிடித்ததுதான் திடீர் மரணத்திற்கு காரணம். ஆதலால் நான் அனைவரையும் வற்புறுத்தி கேட்டுக் கொள்வது, புகை பழக்கத்தை அடியோடு விடுங்கள். விட்டே விடுங்கள். என் முன்னே புகைப்பவர்கள் கையிருந்து சிகரெட்டை பிடுங்கி வீசி எறியலாமென்று இருக்கிறேன்.

ஏனெனில் உங்கள் இருப்பு உங்களைவிட மற்றவர்களுக்கு முக்கியம்.