Saturday 13 December 2014

இப்பலாம் யார் சார் ஜாதி பாக்குறாங்க...





 

   

    இன்னமும் உறுத்திக்கொண்டேதான் இருக்கிறது, இன்று computer lab ல் அடிப்படை விதிகளைக்கூட பின்பற்றாது அந்த மாணவன் செய்த அத்துமீறல், கண்டிக்கப்படும் ஒவ்வொரு முறையும் குரலுயர்த்தி .நாகரிகமற்றமுறையில் ஆற்றிய எதிர்வினைகளோடு. (சமீப காலமாக பெரும்பாலான ஆசிரியர்கள் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதாகத் தெரிகிறது.)

   துறைத்தலைவர் கவனத்திற்கு எடுத்துச் சென்றபோது, மூன்று வயது குழந்தைக்கு காட்டும் கனிவோடு அவனுக்கு அறிவுரை வழங்கிவிட்டு, நீங்கள் அதிகம் சிரமப்படாதீர்கள் மேடம், இவங்கள்ளாம் இப்படித்தான். நான் இப்பலாம் எதையும் கண்டுகொள்வதில்லை. என்று எனக்கு சமாதானம் சொன்னார். சாரி சார் அவன் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் தந்தால் மட்டுமே என் வகுப்பில் அனுமதிப்பேன் என்றேன். பின்னர் அவன் தந்த கடிதத்தின் எழுத்துக்களில் மட்டுமே வருத்தம் இருந்தது. நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க மேடம். தன் ஜாதியை குறிப்பிட்டு திட்டியதாக அவன் புகார் அளித்தால் உங்களுக்குத்தான் பிரச்சனை என்றார் து.தலைவர்.

   நீயெல்லாம் படிக்கவா வர என்ற சக ஆசிரியர்களின் வார்த்தைகளைக்கூட ஆட்சேபித்திருக்கிறேன். அநாகரிகமான எந்த வார்த்தையும் இதுவரை பிரயோகித்ததில்லை. அப்படியிருக்க, அவன் என்ன ஜாதியென்றுகூட எனக்கு தெரியாது. அப்படியே தெரிந்தாலும் ஜாதியைச்சொல்லி எப்படி திட்ட முடியும்? ஜாதி என்ன கெட்ட வார்த்தையா? எனில் எல்லா ஜாதியும்தானே? இந்த கெட்டவார்த்தையைச் சொல்லத்தடை எனில் மற்ற எல்லா கெட்டவார்த்தைகளுக்கும்தானே?

   ஜாதியின் பெயரால் சக மனிதர்களைக் கீழ்மைப்படுத்துவதைத் தடுக்க உருவாக்கப்பட்ட சட்டத்தை அருவருக்கத்தக்க ஆயுதமாக பயன்படுத்துவதா? இப்படியே, வேலையைச் செய்யச்சொல்லி வலியுறுத்திய உயரதிகாரிகள்மீதும் இதுபோல் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அறிகிறேன். இதன் பக்க, பின் விளைவுகள் என்ன? ஏற்கனவே சிதிலமடைந்த நிர்வாக இயந்திரத்தில் இன்னும் பழுதடைந்த உதிரிபாகங்களைப் பொருத்துவதா?

  தனிமனித வழிபாடு கூடாது என கண்டறிந்து சொன்னவனை ஒரு கூட்டம் வழிபடத்துவங்கினால் எப்படியிருக்கும்?

  தராசுத்தட்டு சமநிலைக்கு வந்தபின்னும் இன்னொரு தட்டில் எடையை கூட்டிக்கொண்டே போனால் என்னாகும்? மறுபடி சமனிலை பிழறாதா?

 எனில் சமனிலையைத் தீர்மானிக்கும் காரணிகள்தான் என்ன? யார் தீர்மானிப்பது? அவரின் நேர்மை மற்றும் நடுநிலையின் நம்பகத்தன்மை என்ன?

அதெப்படி நீ இப்படி பேசலாம் என்று யாரும் வரிந்துகட்டிக்கொண்டு வராதீர்கள். எனக்கு எந்த ஜாதிய பின்னணியும் இல்லை. தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் இல்லை. இவை சலுகைகள் அல்ல பிராயசித்தம் என்று சிலபல புலம்பல்களுக்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன். முழுவரலாறையும் கரைத்துக் குடித்தவள் இல்லையெனினும், மனிதத்தன்மையற்று நடந்த, நடக்கும், பெருங்குற்றங்களையும் பாவச் செயலையும் அறிந்தே இருக்கிறேன். உணர்ந்தும்.

  சகமனித மரியாதை ஜாதி மத பின்னணியால் இருக்கவேண்டாம் என்பதே அடிப்படை.  இருட்டுப்பாதைக்கு ஏற்றித்தந்த கொள்ளிக்கட்டையால் தலை சொறியும் மடத்தனம் வேண்டாம் என்பது அடுத்த வலியுறுத்தல்.



No comments:

Post a Comment